இது நான் முதல் முறையாக முழுதாக முடித்த முதல் சிறுகதை
உங்களுக்கு இதைப் படிக்க நேரம் இருக்குமா என்ன ? என்பதெல்லாம் எனக்கு
தெரியவில்லை , ஆனாலும் அனிச்சை செயல் போல அனுப்புகிறேன் .
தங்களது கருத்துகளையும் , யோசனைகளையும் எதிர்பார்த்து தான் ....
முடிந்தால் பதில் எழுதுங்கள்
.
"சிட்டுக்குருவி"
திடீரென்று தான் இப்படி ஆகிவிட்டது ; கதை பேச மாமா இல்லை , கேலி செய்ய
அத்தை இல்லை , கொஞ்சிக் கொண்டே உருட்டி உருட்டி உள்ளங்கையில் சாதம்
வைக்க அம்மா இல்லை .சித்தி கூட எங்கேயோ தூரத்தில் இருந்து கொண்டு
எப்போதோ தொலை பேசுகிறாள் , சித்தப்பா வீடு தங்குவது அரிதாகிப் போய்
நெடுநாளகிறது, பாட்டிக்கு இந்த பட்டணம் பிடிக்காமல் ஊரோடு போய் விட்டாள்,
தாத்தாவோ ரேஷன் கடை ,மளிகைக் கடை ,மார்கெட் என்று ஓய்ந்து பின்மாலையில்
அவர் வயது மனிதர்களைத் தேடி கோயில் , பார்க் என்று போய் விடுகிறார் , என்னை
யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை !!! .
வேப்பமரமும் , புளியமரமும் இல்லாத இந்த ஒன்டிக்குடித்தன நகரத்து நரக வீடு
கொஞ்சம் கொஞ்சமாய் என்னை கொல்லபோவதை போல தினமும் கெட்ட கெட்ட
கனவுகளில் தூங்கவே முடியாத சோகத்தில் தான் இன்று இந்த பின் மத்தியான
நேரத்தில் கால் காசு பெறாத இந்த "சிட்டுகுருவியுடன்" விருதாவாய் பேசிக்கொண்டு
இருக்கிறேன் .
சிட்டு குருவி "விசுக் விசுக்கென்று " பறந்து கொண்டிருந்தது முன் புற பொது
தாழ்வாரத்தில் , யாரோ காய வைத்த வடகத்தை கொத்தி கொத்தி குட்டி மண்டையை
'விலுக் விலுக்கென்று' ஆட்டியவாறு சிறிது வாயிலும் சிறிது வாசல் படியிலுமாக சிந்தி
சிதறி விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒரு நொடியில் அதன் பார்வையில்
நான் பட்டிருக்க வேண்டும் ,
அதுவாகத் தான் என்னிடம் பேச ஆரம்பித்தது ; முதலில் பேச்சு எப்படி தொடங்கியது
என்று யோசித்தேன் நான் !. அதற்கு என் பெயரெல்லாம் தெரிய சாத்தியமே இல்லை ,
ஒருமையில் தான் பேசிகொண்டிருந்தது . இனுக்கி இனுக்கியாய் பிய்த்த வடகத்தை
அலகில் சிக்க வைக்க முயன்று தோற்று போன வெறுப்போ என்னவோ ? சும்மா ஏன்
என்னையே பார்கிராய் ? என்று காட்டமாய் கேட்டு விட்டு வெளிப்புற கேட் வரை
பறந்து காட்டி விட்டு திரும்ப வந்து ஜன்னல் கம்பியில் அமர்ந்து கொண்டு " பதிலை
சொல்லி தொலை என்பதை போல "என்னையே இலக்கு மாற்றி மாற்றி
பார்த்துக்கொண்டே இருந்தது .
ஒரு சிட்டுக்குருவி பேசுமா ? என்பதையே நம்ப முடியாமலிருந்த நான் அதன்
கேள்வியில் திடுக்கிட்டு போனேன் . பேசும் குருவியா இது ? என்ற உற்சாகத்தில்
சந்தோசம் பீறிட்டுக் கொண்டு வர என்ன கேட்டாய் குருவி ? என்றேன் நான் ;
குருவி இளக்காரமாய் சிரித்துக்கொண்டது , மறுபடி பேச முயலவேயில்லை ;
பார்த்துக் கொண்டிருக்கும் போதே குருவி ஜன்னலில் இருந்து எம்பி பறக்க
போவதை போல போக்கு காட்டியது,பிறகு மறுபடி என்னை நீயும் வருகிறாயா
என்னோடு ? என்பதை போல சும்மா பார்த்துக்கொண்டு உட்கார்ந்து விட்டது, அடுத்து
என்ன செய்யப் போகிறாய் நீ ? என்று நானும் விடாமல் அதையே கவனிக்க
தொடங்கினேன். குருவி கொஞ்ச நேரம் பார்த்த பின் "எனக்கு ஒரு தோசை தாயேன்"
என்றது . இல்லை...
கெஞ்சுதலாய் எல்லாம் இல்லை . சட்டமாய் கேட்டது ; நீ எனக்கு கொடுத்து தான்
ஆகவேண்டும் என்று தொனியில் கேட்டதோடு "விருட்டென்று " சமையல்
கட்டுக்குள்ளும் பறந்துபோய் விட்டது . என்ன திமிர் இந்த குஞ்சு குருவிக்கு என்று
செல்ல கோபத்தோடு நானும் பின்தொடாந்தேன். வேறு என்ன செய்ய வீட்டில்
அப்போது யாரும் இல்லை ! அம்மா குவைத்திற்கு வீட்டு நர்சாக காண்டிராக்டில் போய்
மாதம் ஆறு ஆகிறது . ஊரிலிருந்தால் கடன்கொடுத்தவர்களின் தொல்லை கழுத்தை
நெரிக்கும் என்று தான் சென்னைக்கு வந்து ஒரு மில் முதலாளிக்கு கார் டிரைவர்
ஆகிவிட்டார் அப்பா ,பாட்டி தான் ஊருக்குள் எதையோ சொல்லி சமாளித்து கொண்டு
வீட்டோடு இருக்கிறாள் , ஊரை விட மனமில்லை என்பதெல்லாம் வெறும் நகாசுப்
பேச்சு , அவளும் வந்து விட்டால் வீட்டை பண்ணை வீட்டு ராமசாமி அடிமாட்டு
விலைக்கு எடுத்துக் கொண்டு வாங்கிய கடனுக்கு நெடுநாளாய் கட்டாமலிருந்த
வட்டிக்கு கழித்து விடுவாரோ என்ற அதீத பயம் தான் காரணம் ! குருவி
சாவதானமாய் சமையல் உள்ளில் புகுந்து தோசை மூடி வைத்த தட்டத்தை அலகால்
இடறித் தள்ளி விட்டு "சீனி போடு கொஞ்சம் என்றது" , என்னால் சிரிப்பை அடக்கவே
முடியவில்லை . சிரிக்கும் என்னை ஒரு தூசி போல பார்த்து விட்டு , அதுவே பறந்து
போய் நல்லெண்ணெய் இருந்த வால்கின்னத்தை தூக்க முடியாமல் தூக்க முயன்று
எண்ணையை கொட்டி கவிழ்த்து கொண்டது தோசை இருந்த தட்டில்
ஐயோ ! ஏய் குருவி என்னிடம் கேட்டால் நான் எடுத்து தந்திருக்க மாட்டேனா ? இப்படி
எண்ணெய் முழுசும் கொட்டி தீர்த்து விட்டாயே ! மறுபடி எண்ணெய் வாங்க காசுக்கு
நின்றால் அப்பா ஆயிரம் கேள்வி கேட்பாரே! உன்னால் எனக்கு நேரம் சரியில்லை
இன்று என்றேன் நான் எண்ணெய் இழந்துவிட்ட ஆற்றாமையில் ... குருவி
அதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை , அது பாட்டுக்கு ஒரு
தோசையை அறையும் குறையுமாய் சிந்தி சிதறி குதறிப் போட்டுவிட்டு ... அப்புறம்
என்ன ? என்று தண்ணி தொட்டியின் விளிம்பில் போய் உட்கார்ந்தது . தொட்டி தளும்ப
நீர் பிடித்து ஊற்றி வைத்திருந்தேன் நான் ; விழுந்து விடாதே .... பார்த்து உட்காரேன் ;
நான் தான் பதறினேனே தவிர அது என்னவோ தேர்ந்த நீச்சல் வீராங்கனை போல
விளிம்பில் இதன் அசைவில் தளும்பி மேலெழுந்த சின்ன தண்ணீர் துள்ளலில்
தலையை விட்டு ஆட்டிப் புரட்டி ஒரு மினி தலைகுளியல் செய்து கொண்டது , பார்க்க
பார்க்க அதிசயமாய் இருந்தது ;
அதோடு முடியவில்லை கதை ,குளிர்ந்த தண்ணீர் பட்டதும் ஒட்டிக்கொண்ட
சிறகுகளை சடசடவென அடித்து தூசிபடலம் போல நீர்படலத்தை தெறிக்க விட்டு
புகை போக்கி ஓட்டை வழியே அடுப்படி மேல் விழுந்த வட்ட சூரிய ஒளியில் போய்
நின்று கொண்டு இப்படியும் அப்படியும் திரும்பி வெப்பம் வாங்கி கதகதப்பாகிக்
கொண்டது , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு " அது குருவியாய்
தெரியவில்லை ஏதோ விருந்துக்கு வந்த அத்தை மகளை கூட நின்று பார்ப்பதை
போல ஒரு தோழமை உணர்வு சட்டென மேலெழுந்து அந்த அறை முழுதும் நிரம்பி
வழிந்து கசிந்தது .
நான் இங்கே இப்படிக் குருவியோடு குருவியாய் லயித்து நிற்பது பால்கார
அண்ணாமலைக்கு தெரியுமா என்ன? எப்போதும் நேரம் தப்பி பால் கொண்டு வந்து
வசவுகளை அழுக்கு வெள்ளை வேஸ்டி நிறைய வாங்கி கட்டிக்கொண்டு போகும்
அவர் அன்று சரியான நேரத்துக்கு பாலுக்கு மணியடித்தார். போய் வாங்கி வைத்து
விட்டு திரும்ப வரும் முன் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லாத சென்னை நகரத்து
வானிலை மிக மோசமாகி மழை தூரலிட்டது.
"ஐயோ அப்பாவின் யூனிபார்ம் சட்டை....!!!" காலையில் துவைத்து போட்டது ஞாபகம்
வர வேக வேகமாய் மூச்சு வாங்க மொட்டை மாடிக்கு ஓடினேன் . நல்ல வேலை
ரொம்பவும் நனையத் தொடங்கும்
முன் கொடியிலிருந்து பிடுங்கி கொண்டு வந்து விட்ட திருப்தியில் உட்புற
கொடிகயிற்றில் காயப்போட்டு விட்டு குருவியை தேடிக்கொண்டு மீண்டும் உள்ளே
போனேன் . காணோம் ....! குருவி அங்கே இல்லை ஏய் குருவி அதற்குள்ளே எங்கே
போய் விட்டாய் ? மழை வேறு பலமாய் வரும் போல தெரிகிறது... நனைந்து விட்டால்
என்ன செய்வாய் குட்டி பறவையே ? நான் எனக்குள் பேசிக்கொண்டே குருவியை
வீட்டுக்கு உள்ளே ... வெளியே என்று கொஞ்ச நேரம் தேடினேன் . காணோம் ...! எங்கும்
குருவி இல்லை . ஐந்து மணிக்கு அப்பா வந்து விட்டார் . ஆறு மணிக்கு தாத்தா
வந்தார் . குருவி மட்டும் வரவேயில்லை . நான் குருவியை நினைத்துக் கொண்டே
இருவருக்கும் காப்பி போட்டுக் கொடுத்தேன் , வாசல் தெளித்து கோலம் போட்டேன்
. இரவுக்கு மாவு பிசைந்து கோதுமை சப்பாத்தி போட்டு , தேங்காய் சட்னி வைத்து
இருவருக்கும் கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்தேன் . எங்கே போயிருக்கும்
இந்த மழையில் குருவி !!! என்று யோசித்துக் கொண்டே சமைத்து சாப்பிட்ட
பாத்திரங்களை கழுவி கவிழ்த்தேன் . குருவியை காணவே காணோம் ...! இனிமேலா
வரபோகிறது.... மணி ஒன்பது ஆகி விட்டது . அப்பா நைட் சிப்டுக்கு புறப்பட்டு
விட்டார் , தாத்தா வெளித்திண்ணையில் ரேஷன் கடை சேலை விரித்துப் படுத்து
விட்டார் . மழை அது பாட்டுக்குப் பெய்து கொண்டிருந்தது . இரவு வானத்தை மழை
முகமூடிக் கொள்ளைக் காரன் போல கருப்பு துணி போர்த்தி கண்ணுக்குத் தெரியாமல்
மறைத்து சாகசம் செய்து விட்ட திருப்தியில் ஆர்பாட்டமின்றி சிறு ஓசையுடன்
இறங்கி பூமியுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தது . கல்யாணமாகி வருடம் சில கடந்து
நிதானமாகி விட்ட தம்பதியர் போல பூமிக்கும் மழைக்குமான சங்கமம் சிறு ரகசிய
சம்பாசனையுடன் விடியும் வரை தொடர்ந்...தது....!!! குருவி எங்கே போயிருக்குமோ ?
மழைக்கு எங்கே ஒதுங்கியிருக்குமோ ? அதன் கூடு எந்த மரத்தில் , எவ்வளவு தூரத்தில்
இருக்குமோ ? இந்நேரம் என்ன செய்து கொண்டிருக்குமோ குருவி?
குருவி...குருவி...குருவி !!! ஏய் ! குருவி ... சிட்டுக் குருவி...... சிட்டுக்......குருவி ...எங்கே
போய்விட்டாய் என் செல்லக் குருவி ?
குருவியை நினைத்துக் கொண்டே தூங்கினாலும் கனவில் என்னவோ குருவி எல்லாம்
வரவில்லை ,ஒரு வேளை கனவே வரவில்லையோ என்னவோ ?! காலை டிபன்
தயாரிக்கும் அவசரத்திலும் அதென்னவோ அந்த காணமல் போன குருவியை மட்டும்
மறக்கவே முடியவில்லை ....இன்றைக்கு மறுபடி வருமோ ? என்ற எதிர்பார்போடு தான்
சாதம் வைத்து , சாம்பார் வைத்து ...உருளைக் கிழங்கு வறுவல் செய்து , அப்பளம்
பொரித்தேன்.குருவிக்கு இதெல்லாம் பிடிக்குமா ? என்ற யோசனையோடு தான்
ஒவ்வொன்றையும் செய்து மூடி வைத்தேன் . மழை நின்று போன விடிகாலையும்
வழக்கம் போலத்தான் விடிந்திருந்தது , ஆனாலும் காற்றில் ஒரு ஈரவாடை பரவி
மொட்டைமாடியில் துணி காயபோட்டு விட்டு , கட்டைசுவற்றில் கைவைத்து கீழே
விரையும் வாகனங்களைப் பார்த்தவாறு ஆழமாய் மூச்சை உள்ளே இழுத்து
மெதுவாய் வெளியேபரவ விடும் போது ஈரத்தோடு ஈரமாய் ஒரு குளிரான சந்தோசம்
தேகமெங்கும் சந்தனம் போல அப்பிக்கொள்ளத்தான் செய்கிறது ஒவ்வொரு
முறையும் !
குருவிக்கு குளிறாதா ? பார்த்தால் கேட்க வேண்டும் ...."வருமா? வந்தால்
கேட்க வேண்டும் !!!" என்று கேள்வியை ஓரமாய் மனதில் போட்டு வைத்தேன் . நேற்று
போல இல்லாமல் பால்கார அண்ணாமலை இன்று பழக்க தோசமாய் லேட்டாகத்தான்
வந்தார் ... ஒன்றும் சொல்வதற்கின்றி பேசாமல் பாலை வாங்கி மூடி வைத்தேன் .
அம்மாவிடமிருந்து தொலை பேசி அழைப்பு வந்தது; மாதம் ஒருமுறை அரைமணி
நேரம் பேசுவாள் அம்மா , ஏதோ திருவிழா போல துள்ளிக்கொண்டு பேசுவதற்கு
ஓடுவேன் நான் . இன்று அப்படி இல்லை , வெகு நிதானமாய் போய் விட்டு திரும்பிய
என்னை தாத்தா அதிசயம் போல பார்த்துவிட்டு குனிந்து மறுபடி பேப்பர் படிக்க
ஆரம்பித்தார். அப்பா வந்தார் மறுபடி காபி போட்டேன் , இரவு சமைத்தேன் ,
எல்லோரும் சாப்பிட்டோம். இரவு ஷிப்ட் வந்தது .
அப்பா கிளம்பி போய் விட்டார் . தாத்தா திண்ணையில் யாரோ நண்பரோடு பேசி
கொண்டிருந்தார் , அவர் அப்படியே தூங்கி விடுவார் , இனி உள்ளே வரமாட்டார் ,
தண்ணீர் முதலிலேயே சொம்பில் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொள்வார் .
சின்ன வீடு தான் .... ஆனாலும் தனிமை ...ருஷியானதா ?... எப்போதும்
தனிமை ....ருஷியானதா...?!
பெரிய பங்களா வீடெல்லாம் கழுத்து வரை கடனோடு ஊரில் இருக்கிறது .... கோயில்
கோபுரத்தில் அரக்கி போன்ற தோற்றத்துடன் கத்தி பிடித்து நிற்கும் காவற்காரி
பொம்மை போல பாட்டி அங்கே இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு தான்
இருப்பாள் என நினைக்கையில் நெஞ்சுக்குள் பிசைகிறது ,
தாத்தா .... பாவம் ?
அப்பா .... பாவம் தான் ?
அம்மா ...அவளும் கூட பாவம் தானே ? !
அப்படியானால் நான் ???!!!
அந்த குருவி... ?!
தூரத்தில் எங்கேயோ பாட்டு சத்தம் ... "சிட்டுக்குருவி ....சிட்டுக்குருவி ...சேதி
தெரியுமா ? என்னை விட்டு பிரிந்து போன கணவன் வீடு திரும்பலை ..."
ஏய் குருவி...சிட்டுக் குருவி
உன் ஜோடியத்தான் கூட்டிகிட்டு
நீ இங்கே வந்து கூடு கட்டு ...
இன்றைக்கு சிட்டுக் குருவி ஸ்பெஷல் போல ரேடியோவில்
கடைசியில் ...
எப்போதும் போல் ... ஒற்றையாய் தெளிவான சிந்தனைகள் ஏதுமின்றி தூங்கத்
தொடங்கினேன் நா....னு...ம் !!!
--------------------------------------------------------------******கயல் ******------------------------------------------------------------