என்ன என் கையில் ?
என்ன என் கையில் ...?
ஒவ்வொரு சிசுவும்
கருவறை தாண்டும்
அத்தனை முறையும்
கை மூடிப் பிறக்கும் !
என்ன அதன் கையில்
எதை சொல்ல இத்தனை பூடகம் ?
நாமும் ஒருநாள் சிசுவாய்ப்
பிறந்தோம் பின்
வளர்ந்து வளர்ந்தே
ஆணென்றும்
பெண்ணென்றும்
பேதம் பிரிந்தோம்
இன்று
வாதம் புரிகிறோம் ...
பத்து விரல்களும்
பாடம் சொல்ல
ஏட்டுச் சுவை தனை
ஏற்றுப் பயின்றோம்
கல் தோன்றி மண் தோன்றக்
காலத்து முன் தோன்றிய
மூத்தகுடியின்
முதல் மகனும்
சின்னஞ்சிறு
சிசு வாய் பிறக்கும் நாளில்
கை இறுக்கி மூடி
உயிரொளி
எழுப்பியே
உலகம் கண்டிருப்பான் ...
என்ன அவன் கையில்
இந்த உலகம் அவன் கையிலோ ?
இந்த ஜனனம்
அவன் கையிலோ ?
இனி மரணம் கூட அவன் கையிலோ ?
என்ன என் கையில் ?
என்ன உன் கையில் ?
என்ன அவன் கையில் ?
எல்லாமே
இதற்கு
முன்பும் சரி
இனி எப்போதும் சரி
எல்லாம் நம் கையில் தான்
என
உணர்ந்தே தான்
கை மூடி கண் மூடிப்
பிறந்தோமோ ?
எப்படி இருப்பினும் ...
உலகம் நம் கையில்
என உயர்ந்த குரலில்
பாடிடுவோம்
இந்தக் கை ...அந்தக் கை
தோற்றவன் கை
ஜெயித்தவன் கை
உயர்ந்தவன் கை
தாழ்ந்தவன் கை
மூத்தவன்
கை
இளையவன் கை
ஆணின் கை
பெண்ணின் கை
கறுப்புக் கை
வெள்ளைக் கை
மாநிறத்து வண்ணக் கை
பழுப்புக் கை
பகைவன் கை
எல்லாக் கையும் ஒன்றாய்
இணைந்தால்
புதிய உலகம்
படைத்திடலாம்
புத்தம் புதிதாய்
வாழ்ந்திடலாம்
என்ன நம் கையில்
எல்லாமே நம் கையில்
கயல்